குரங்குகள் தொல்லையால் வீட்டிலேயே முடங்கிய மக்கள்


குரங்குகள் தொல்லையால் வீட்டிலேயே முடங்கிய மக்கள்
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் மூன்றாவது வாா்டில் குரங்குகள் தொல்லையால் வீட்டிலேயே மக்கள் முடங்கி கிடக்கிறாா்கள்.

கடலூர்

விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அந்த வார்டு பகுதியில் நிலவும் மக்களின் பிரச்சினைகள் குறித்து வார்டு வாரியாக வாரந்தோறும் அலசி ஆராய்ந்து வருகிறோம். அதன்படி இந்த வாரம் 3-வது வார்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்...

அடிப்படை வசதிகள் இல்லை

விருத்தாசலம் நகராட்சி 3-வது வார்டில் ஆர்.டி.ஆர். நகர், லட்சுமி நாராயணன் தெரு, மாணிக்கவாசகர் நகர், ஜே.ஜே.நகர், புதுக்குப்பம், குட்ஸ் ஷட் ரோடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இதில் ஜே.ஜே.நகர், லட்சுமி நாராயணன் தெரு, மண்டிக்கடை பகுதிகளில் தெருவிளக்குகளே அமைக்கப்படாததால், அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படு்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலைகளும், சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது.

மேலும் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

காடாக மாறிய குட்டை

இந்த வார்டின் ஒரே நீர் ஆதாரமான டேனிஷ் மிஷன் பள்ளி முன்புறம் உள்ள குட்டையை தூர்வாரி முறையாக பராமரிக்காததால், தற்போது செடி-கொடிகள் அடர்ந்து வளர்ந்து முற்றிலும் தூர்ந்து போய் கிடக்கிறது. மேலும் குட்டை இருந்த இடமே தெரியாத அளவிற்கு செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் மாறியுள்ளது.

இதனால் மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால், அந்த குட்டை வறண்டு கிடக்கிறது. மக்களின் நீர் ஆதாரமான அந்த குட்டையை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

மேலும் இந்த வார்டை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக ஜங்ஷன் ரோடு, பாலக்கரை, கடைவீதி ஆகிய பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சமாளித்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்குள் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார்கள்.

எனவே 1, 2, 3 மற்றும் 5-வது வார்டுகளை உள்ளடக்கி புதுக்குப்பத்தை மையமாக கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதே வார்டு மக்களின் கோரிக்கை ஆகும்.

புழுதி பறக்கும் சாலை

இதுகுறித்து அந்த வார்டில் வசிக்கும் வக்கீல் புஷ்பதேவன் கூறுகையில், இங்குள்ள மினி குடிநீர் தொட்டிகள் சேதமடைந்து காட்சிப்பொருளாக உள்ளது. இப்பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் சுண்ணாம்பு தன்மை அதிகளவில் இருப்பதால், அதனை குடிக்கும் பலர் நோய் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

இங்கு சுடுகாடு இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை நீண்ட தூரத்தில் உள்ள நாச்சியார்பேட்டைக்கு தூக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அதனால் ஏற்கனவே சுடுகாட்டிற்கு தேர்வு செய்த இடத்தை அளவீடு செய்து, தகன மேடை அமைத்துத்தர வேண்டும். மேலும் புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும். விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலை பணி மந்தகதியில் நடக்கிறது. சாலையின் இருபக்கங்களிலும் ஜல்லிகள் கொட்டப்பட்டிருப்பதால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால் சாலையோரம் மக்கள் குடியிருக்க முடியாமல் அவதி அடைகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

இருளால் வழிப்பறி

வினோத்:- மாணிக்கவாசகர் நகர், புதுக்குப்பம் பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தெருவிளக்குகள் ஏதும் இல்லாததால், அப்பகுதியில் நிலவும் இருளை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. விருத்தாசலம் வயலூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சமூக விரோதிகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துவதுடன், பெண்களை கேலி கிண்டல் செய்கின்றனர். அதனால் பெண்களின் பாதுகாப்புக்காக போலீசார் தினந்தோறும் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.

குரங்குகள் தொல்லை

அருந்தவம்:- இங்குள்ள கழிவுநீர் கால்வாய்களில் பன்றிகள் கூட்டமாக திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு சுற்றித்திரியும் ஏராளமான குரங்குகள், வீதிகளில் நடந்து செல்பவர்களின் கைகளில் உள்ள தின்பண்டங்களை பிடுங்கிச் செல்கின்றன. வீடுகளில் உலர வைக்கும் அரிசி, கோதுமை, ஊறுகாய், வற்றல் உள்ளிட்டவற்றையும் குரங்குகள் கூட்டம் படையெடுத்து வந்து காலிசெய்துவிட்டு செல்கின்றன. மேலும் வீடுகளுக்குள்ளும் புகுந்து பொருட்களை நாசம் செய்கிறது. குரங்குகளை தடுத்தால், அவை சீற்றத்துடன் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. இதனால் மக்கள் கதவை பூட்டி விட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காடுகளில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story