ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி
பிபின் ராவத் உள்பட 14 பேரை பலி கொண்ட ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
குன்னூர்
பிபின் ராவத் உள்பட 14 பேரை பலி கொண்ட ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஹெலிகாப்டர் விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் முப்படை அதிகாரிகளின் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி நடக்க இருந்த ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்க முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். பின்னர் வெலிங்டனுக்கு ஹெலிகாப்டரில் பயணித்தார். அவருடன், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 14 பேர் வந்தனர். நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் வந்தபோது, மோசமான வானிலையால் திடீரென ஹெலிகாப்டர் மரங்களில் மோதி கீழே விழுந்தது. இதை கண்ட அந்த கிராம மக்களும், தகவல் அறிந்து வந்த ராணுவத்தினர் உள்பட அரசுத்துறையினரும் உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் ஒருவரை கூட காப்பாற்ற முடியவில்லை. அந்த விபத்தில் பிபின் ராவத் உள்பட 14 பேரும் உயிரிழந்தனர்.
நினைவஞ்சலி
இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்து, நேற்றுடன் ஓராண்டை கடந்து விட்டது. இதையொட்டி நஞ்சப்பசத்திரத்தில் பிபின் ராவத் உள்பட 14 பேருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் புகைப்படம் முன்பு விளக்கு ஏற்றியும், மலர் தூவியும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி கமாண்டென்ட் லெப்டினென்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். இது தவிர அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர்.
நலத்திட்ட உதவிகள்
இதையடுத்து அந்த கிராம மக்களுக்கு ராணுவம் சார்பில் கம்பளிகள் வழங்கப்பட்டன. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷ்ணகுமார், தாசில்தார் சிவகுமார், ராணுவ அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.