குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல்
நெல்லை சந்திப்பில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
நெல்லை சந்திப்பின் முக்கிய பகுதியாக விளங்குவது சிந்துபூந்துறை. இந்த பகுதியில் உள்ள காமராஜர் தெரு, சாலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நாள்தோறும் மாநகராட்சி சார்பில் ஒரு மணி நேரம் வரை காலை, மாலை இரு நேரங்களிலும் மாநகரப் பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சிந்துபூந்துறை சாலை தெரு, காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிந்துபூந்துறை காமராஜர் தெரு, சாலை தெரு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.