மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை பகுதியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை பகுதியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் மருத்துவர் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குறைந்த மின் அழுத்தத்தின் காரணமாக மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்களும் பழுதடைந்து உள்ளன.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அடிக்கடி மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மின் தடையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவலறிந்த கடலங்குடி மின்வாரிய அலுவலக உதவி பொறியாளர் கீதா மற்றும் அலுவலர்கள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்வாரிய அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பூம்புகார்- கல்லணை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.