தங்கும் விடுதியில் 'பிட்புல்' நாய்கள் வளர்ப்பு; எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை


தங்கும் விடுதியில் பிட்புல் நாய்கள் வளர்ப்பு; எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
x

கொடைக்கானல் அருகே தடை செய்யப்பட்ட பிட்புல் நாய்கள் வளர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கும் விடுதியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே தடை செய்யப்பட்ட பிட்புல் நாய்கள் வளர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கும் விடுதியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பிட்புல் நாய்கள்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் தனியார் தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, கொடைக்கானல் அருகே சின்னபள்ளத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், தங்கும் விடுதியை நடத்தி வருகின்றனர். இந்த விடுதியில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட 'பிட்புல்' நாய்களை காவலுக்காக வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் வளர்க்கப்படும் இந்த வகை நாய்கள், அவற்றின் உரிமையாளரின் க‌ட்டளைக்கு மட்டுமே அடிபணிய கூடிய சுபாவம் கொண்டது. மேலும் இந்த நாய்கள் மிக கொடூரமாக கடிப்பது மற்றும் மூர்க்கத்தனமாக தாக்கும் தன்மை கொண்டது.

இந்தநிலையில் தங்கும் விடுதியை சேர்ந்த கேரள இளைஞர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த நாய்களை சாலையில் அவிழ்த்துவிடுகின்றனர். அப்போது அவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை துரத்துவது, கடிப்பதுமாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நாய்கள், சாலையில் நடந்து சென்ற 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியுள்ளது. இதுகுறித்து கேரள இளைஞர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அப்போது அவ‌ர்க‌ள் அலட்சியமாக ப‌தில் தெரிவித்துள்ளனர். அதேபோல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் கேரள மாநில இளைஞர்கள் நடத்தும் தங்கும் விடுதியை, சின்னபள்ளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே 'பிட்புல்' நாய்கள் வளர்க்கும் விடுதியை சேர்ந்த கேரள இளைஞர்கள் சிலரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி தடை செய்யப்பட்ட 'பிட்புல்' நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்று தடை செய்யப்பட்ட நாய்களை வ‌ள‌ர்ப்ப‌வ‌ர்க‌ள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story