சமையல் செய்து பொதுமக்கள் போராட்டம்
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசத்தில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் குப்பைமேடு பகுதியில் சுகாதார வளாகத்துடன் கூடிய சமுதாயக்கூடம் கட்ட வேண்டும். சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, வடிகால் வசதி, மதில் சுவர், வீட்டுமனை வழங்க வேண்டும் ஆகிய 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சமையல் செய்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பாபநாசம் நகரச் செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முரளிதரன், மாவட்ட குழு உறுப்பினர் காதர்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமையல் செய்து போராட்டம்
பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு, சமையல் பாத்திரங்களை கொண்டு வந்து சமைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் கலைவாணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்பட 43 பேரை கைது செய்தனர்.