சாலையை சீரமைக்க கோரி காத்திருப்பு போராட்டம்
கொள்ளிடம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கொள்ளிடம்;
கொள்ளிடம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சாலை வசதி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி ஊராட்சி அலுவலகம் எதிரே சாலை வசதி கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொள்ளிடம் அருகே புத்தூர் முதல் மாதிரவேலூர் வரை உள்ள சாலையை மேம்படுத்த கேட்டு ஆண்டு கணக்கில் பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.7.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் சாலையில் விழுந்து காயமடைகிறார்கள். எனவே சாலைப்பணியை விரைவாகவும் தரமாகவும் செய்து தரக்கோரி மக்கள் பாடல் பாடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
சம்பவ இடத்தில் வஜ்ரா வாகனம் மற்றும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர் தாரா உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதை ஏற்காத போராட்ட குழுவினர் கலெக்டர் அல்லது கோட்டாட்சியர் நேரில் வந்து உறுதியளித்தால் மட்டுமே காத்திருப்பு போராட்டத்தை கைவிடுவதாக கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலைந்து சென்றனர்
இதைத் தொடர்ந்து சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி போலீஸ் துணைசூப்பிரண்டு லாமேக், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று அதன் அடிப்படையில் சாலை பணிகள் முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று நேற்று மாலை கிராம மக்கள் கலைந்து சென்றனர்.