கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பும் படுகை கிராம மக்கள்
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் முகாம்களில் இருந்து படுகை கிராம மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் முகாம்களில் இருந்து படுகை கிராம மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்றுப்படுகை கிராமங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான ஆறாக கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த ஆற்றுப்படுகை பகுதியில் நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், சரஸ்வதி விளாகம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்து உள்ளன. கொள்ளிடம் ஆற்றின் மேடான பகுதியில் இந்த கிராமங்கள் அமைந்து உள்ளன. இங்கு விவசாயமும் நடந்து வருகிறது.
காய்கறி, பூ போன்ற தோட்டப்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பலருக்கு வாழ்வாதாரம் கிடைத்து வருகிறது. பெரும்பாலும் கொள்ளிடம் ஆறு வறண்டே காணப்படும். ஆனால் அதில் வெள்ளம் வரும்போது படுகை கிராமங்கள் அனைத்தும் பெரும் பாதிப்புக்கு ஆளாவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
வீணாகும் தண்ணீர்
கர்நாடகத்தில் மழை பெய்தால் மட்டுமே தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் தொய்வின்றி நடைபெற முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் டெல்டா பகுதி வழியாக செல்லும் கொள்ளிடம் ஆற்றில் வரும் வெள்ளம் முழுவதும் விவசாயத்துக்கு பயன்படாமல் வீணாக கடலில் கலப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையை ஆண்டாண்டு காலமாக ஏற்படுத்தி வருகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 4 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, படுகை கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கால்நடைகளுடன் குடியிருப்புகளை விட்டு வெளியேறி கடந்த சில நாட்களாக அரசின் நிவாரண முகாம்களிலும், ஆற்றின் கரையில் பந்தல் அமைத்தும் தங்கி கடும் அவதிப்பட்டு வந்தனர்.
வீடுகளுக்கு திரும்பினர்
கிராமங்களை விட்டு வெள்ளம் எப்போது வெளியேறும்? எப்போது தங்கள் இருப்பிடங்களுக்கு செல்லலாம்? என கிராம மக்கள் காத்திருந்தனர். அடிக்கடி தங்கள் கிராமத்துக்கு படகில் சென்றும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் தங்கள் உடைமைகளுடன் வீடுகளுக்கு திரும்பி சென்று வருகின்றனர். இந்த பகுதியில் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்ததால் படுகை கிராமங்களில் உள்ள வீடுகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அவற்றை சுத்தம் செய்யும் பணியில் கிராம மக்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். அரசின் சார்பில் அளக்குடி, ஆச்சாள்புரம், சரஸ்வதி விளாகம், துளசேந்திரபுரம் அனுமந்தபுரம் ஆகிய பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.