வாலிபர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்
கொள்ளிடம் அருகே வாலிபர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம், மே.31-
கொள்ளிடம் அருகே வாலிபர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விஷம் குடித்து தற்கொலை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சி பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அற்புதராஜ்(வயது30). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக அற்புதராஜ் விஷம் குடித்தார்.இது குறித்து தகவல் அறிந்த அவரது மனைவி மணியரசி, அற்புதராஜை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரிஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அற்புதராஜ் உயிரிழந்தார்.
போக்குவரத்து பாதிப்பு
அற்புதராஜ் உடலை அவரது உறவினர்கள் பெற்று வந்த நிலையில் அவரது இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் பெரம்பூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.சாலை மறியல் காரணமாக புத்தூர் -குன்னம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.