வேனை சிறைபிடித்த பொதுமக்கள்


வேனை  சிறைபிடித்த பொதுமக்கள்
x

வேனை சிறைபிடித்த பொதுமக்கள்

திருப்பூர்

உடுமலை

உடுமலையையடுத்த கணபதிபாளையம் பகுதியில் குப்பை கொட்டிய வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கழிவுகள்

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் வாகனங்களில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவில் கோழிக்கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் கட்டிடக் கழிவுகள் என மண்ணுக்கும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பலவிதமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஒருசில கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து குப்பைகளைக் கொட்டும் வாகனங்களை சிறைபிடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கணபதிபாளையம் ஊராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான காலாவதியான குளிர்பானங்களை கொண்டு வந்து கொட்டிய வேனை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.இதனையடுத்து அங்கு வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் அந்த வாகனத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கோரிக்கை

இந்தநிலையில் நேற்று அந்த பகுதிக்கு அருகில் கழிவுகளை கொட்டிய லாரியையும் பொதுமக்கள் மறித்துப் பிடித்தனர். தூத்துக்குடியிலிருந்து வாழைத்தார்களை ஏற்றி வந்த அந்த லாரி, உடுமலையில் வாழைத்தார்களை இறக்கி விட்டு திரும்பி செல்லும்போது கழிவுகளை கொட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அந்த லாரிக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Next Story