மக்கள் நிலை ஆய்வு பட்டியல் ஒப்புதலுக்கு ஒத்துழைக்க வேண்டும்


மக்கள் நிலை ஆய்வு பட்டியல் ஒப்புதலுக்கு ஒத்துழைக்க வேண்டும்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் நிலை ஆய்வு பட்டியல் ஒப்புதலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராணிப்பேட்டை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மக்கள்நிலை ஆய்வு பட்டியல்

கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஈடுபடுத்தி ஏழை, மிகவும் ஏழை, மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் என மக்களால் அடையாளம் காணப்பட்டு மக்கள் நிலை ஆய்வு பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

தற்போது ஏற்கனவே மக்கள் நிலை ஆய்வில் அடையாளம் காணப்பட்ட இலக்கு மக்கள் குடும்பங்களிலிருந்து சமுதாயம் சார்ந்த அமைப்புகளான சுய உதவிக் குழுக்கள், குடியிருப்பு அளவிலான மன்றம் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றின் மூலம் இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆன குடும்பங்களையும், தற்போதைய பொருளாதார நிலையின் அடிப்படையில் ஏழை, மிகவும் ஏழை நிலையிலிருந்து நடுத்தரம், வசதி என அடையாளம் காணப்பட்டவர்களையும் மக்கள் நிலை ஆய்வுப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும், விடுபட்ட புதிய இலக்கு மக்கள் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகளால் சரிபார்க்கப்பட்டு, பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலை மக்கள் நிலை ஆய்வுப் பட்டியலில் நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஒத்துழைக்க வேண்டும்

ஆதலால் அந்தந்த கிராம ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு மக்கள் நிலை ஆய்வுப் பட்டியல் ஒப்புதலுக்கு முழு பங்களிப்பினை அளிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story