மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை


மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:45 PM GMT)

மயிலம் அருகே படித்துறை அமைப்பதற்காக குளத்து நீரை வெளியேற்றியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்ததை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம்

மயிலம்

ரூ.11 லட்சம் ஒதுக்கீடு

மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அவ்வையார்குப்பம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கருமகாரியகுளம், படித்துறை அமைத்தல் மற்றும் குளத்தின் உள்புற தடுப்புச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிக்களுக்காக ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் ஒதுக்கப்பட்டது. அதன்படி பணிகளை தொடங்குவதற்கு தேவையான ஜல்லி, மண் உள்ளிட்டவை குளத்தின் கரையோரம் கொட்டி வைக்கப்பட்டது.

நீர் வெளியேற்றம்

இந்த நிலையில் கடந்த வாரங்களில் பெய்த பலத்த மழையினால் குளம் முழுவதுமாக நிரம்பியது. பின்னர் கடந்த 5 நாட்களாக மழை நின்றதால் நேற்று முன்தினம் கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக, நிரம்பிய குளத்தில் உள்ள நீரை டிராக்டர் எந்திரம் மூலம் ஒப்பந்ததாரர் வெளியேற்றினார்.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் குளத்தில் உள்ள தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வரவில்லை. இதனால் பொதுமக்கள் அலுவலக வாயிலில் நின்றபடி சிறிது நேரம் கோஷம் எழுப்பிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து படித்துறை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story