கடும் அனல் காற்றால் மக்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரத்தையொட்டி வீசிவரும் கடும் அனல்காற்றால் மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை தேடி மக்கள் செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரத்தையொட்டி வீசிவரும் கடும் அனல்காற்றால் மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை தேடி மக்கள் செல்கின்றனர்.
வெயிலின் தாக்கம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே கடந்த மாதம் முதல் வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4-ந் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயிலின் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்தது.இதன்காரணமாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் இதன்காரணமாக அனல்காற்று வீசும் என்றும் எச்சரித்துள்ளது. இதற்கேற்ப ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நட்களாக வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் செல்ல முடியாத வகையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
அனல் காற்று
பொதுவாக கடும் கோடை காலங்களில் கூட கடற்கரை பகுதி என்பதால் மாலை நேரங்களில் குளிர்காற்று வீசுவது வழக்கம். ஆனால், தற்போது இந்த அனல் காற்று காரணமாக இரவிலும் கடும் புழுக்கத்துடன் கடும் வெப்பநிலை நீடித்து வருகிறது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
வெப்ப அனல்காற்று காரணமாக உருவாகி உள்ள வெப்பத்தின் கொடுமையை தணிக்க பொதுமக்கள் இளநீர், தர்ப்பூசணி, மோர், சர்பத், பதநீர், நுங்கு போன்ற நீர்சத்து நிறைந்த பானங்களை வாங்கி பருகி தங்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றி வருகின்றனர். நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரியை அனைவரும் போட்டி போட்டு வாங்கி சென்று நீர்ச்சத்து தேவையை நிறைவேற்றி வருகின்றனர். இதனால் கடும் கோடை வெயிலில் வெள்ளரி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. என்னதான் வெள்ளரி விற்பனையானாலும் போதிய விலை கிடைக்கவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சுட்டெரிக்கும் வெயில் புழுக்கத்துடன் இருப்பதால் வயதானவர்கள் வெளியில் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
கால்நடைகள் பரிதாபம்
மனிதர்கள் இப்படி தங்களின் வெப்ப தாக்கத்தினை தணித்து கொண்டிருக்கும் வேளையில் கால்நடைகள் வெப்ப கொடுமையில் இருந்து தப்பிக்க மரங்களின் நிழல்களை தேடி அலைந்து தஞ்சம் அடைந்து வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் அனல் காற்று வீசுவதாலும் தண்ணீர் தாகத்திற்காக கால்நடைகள் அலைந்து திரிவது பார்க்க பரிதாபமாக உள்ளது. ஆங்காங்கே உள்ள நீர் நிலைகள் மற்றும் வெளியிடங்களில் வைக்கப்பட்டள்ள குடங்கள், தொட்டிகளில் உள்ள தண்ணீரை முடிந்தளவு முயற்சி செய்து குடித்து தண்ணீர் தாகத்தை தணித்து வருகின்றன.