தூத்துக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி


தூத்துக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி 3-வது ரெயில்வே கேட் மேம்பாலம் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி 3-வது ரெயில்வே கேட் மேம்பாலம் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேம்பாலம்

தூத்துக்குடி நகரை இரண்டாக பிரிக்கும் வகையில் ரெயில் தண்டவாளம் அமைந்து உள்ளது. இதனால் தண்டவாளத்தில் இருபுறமும் உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் 4 ரெயில்வே கேட்டுகள் அமைந்து உள்ளன. இதில் 3-வது ரெயில்வேட் அருகே புதிய பஸ் நிலையம், பழைய பஸ்நிலையம் அமைந்து உள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து 3-வது ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பாலத்தில் ஆங்காங்கே பழுதுகள் ஏற்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பழுது நீக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதனால் அந்த பாலம் 10 நாட்கள் மூடப்படுவதாக தூத்துக்குடி கோட்ட நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பொறியாளர் ஆறுமுகநயினார் தெரிவித்தார்.

மாற்றுப்பாதை

இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலையில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள 3-வது ரெயில்வே கேட் மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையாக 2-ம் கேட் மற்றும் 4-கேட் பாதையை நாடினர். பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் 4-ம் கேட் வழியாக சென்றன. அதே போன்று நகருக்குள் இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் 2-ம் கேட் வழியாகவும் அதிக அளவில் சென்றன. அப்போது இந்த ரெயில்வே கேட்டை தாண்டி உடனடியாக இடது மற்றும் வலது புறங்களில் வானங்கள் திரும்பி செல்கின்றன. இதன் காரணமாக அந்த ரெயில்வே கேட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் மிகவும் மெதுவாக நகர்ந்தன. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஆங்காங்கே சந்துகளில் இருந்தும் வாகனங்கள் நுழைந்து மெயின் ரோட்டுக்கு வந்ததால் வாகனங்கள் நகராமல் சிக்கி திணறின.

நடவடிக்கை

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி நகரில் உள்ள பெரும்பாலான போக்குவரத்து போலீசார் 2-ம் கேட் மற்றும் 4-ம் கேட் பகுதியில் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு சாலை மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி ஒவ்வொரு மார்க்கமாக வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். அதன்பிறகு ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறையத் தொடங்கியது. மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏதேனும் மாற்று வழிகள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதே போன்று பாலம் பராமரிப்பு பணியால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து இருப்பதால், பராமரிப்பு பணியை இரவு பகலாக மேற்கொண்டு விரைவாக பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story