வேலூர் மாநகராட்சியில் முறையாக அமைக்கப்படாத நடைபாதையால் பொதுமக்கள் அவதி
வேலூர் மாநகராட்சியில் முறையாக அமைக்கப்படாத நடைபாைதயால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் முறையாக அமைக்கப்படாத நடைபாைதயால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கால்வாய் வசதி
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டதைதொடர்ந்து ஒவ்வொன்றாக வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது நகரின் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் தூர்ந்து போய் காணப்பட்டது. இதனால் மழை பெய்யும்போது வீடுகளுக்குள்ளும், கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் போதுமான கால்வாய் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணிகள் சுமார் 80 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.
நடைபாதை
கால்வாய் அமைக்கப்பட்ட இடங்களில் அதற்கு மேல்பகுதியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. நடைபாதையில் தடுப்பு கம்பிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் உள்ளது. மழைநீரும் விரைவில் வெளியேறி விடுகிறது.
இந்தநிலையில் அமைக்கப்பட்ட கால்வாய் நடைபாதை பராமரிப்பின்றி அனாதையாக விடப்பட்டுள்ளது போன்று காட்சியளிக்கிறது. பல இடங்களில் பேவர் பிளாக் கற்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பல்வேறு இடங்களில் நடைபாதையில் மின்கம்பங்கள் ஆக்கிரமித்துள்ளன. மின்கம்பங்களை அகற்றாமல் நடைபாதை அமைத்துள்ளதால் அவர்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பல இடங்களில் மின்கம்பங்களை ஒட்டியவாறு கால்வாய் அமைக்கப்படுகிறது.
சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தில் அடிபம்பினை அகற்றாமல் அதன்மீது கால்வாய் அமைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இரும்பு கம்பிகள் சேதம்
நடைபாதையில் ஆங்காங்கே கற்கள் இல்லாத நிலையும் காணப்படுகிறது. கால்வாய் மேற்பகுதியில் கற்கள் பதிக்கப்படும் முன்பு இருபுறமும் சிமெண்டால் பக்கவாட்டு தடுப்பு கட்டப்பட வேண்டும். அதற்கு இடையில் தான் கற்களை பதிக்க வேண்டும். ஆனால் மாநகராட்சியில் சில இடங்களில் பக்கவாட்டு தடுப்பு கட்டாமலேயே பேவர் பிளாக் கற்களை பதித்து விடுகின்றனர். இதனால் ஒரு மழையை கூட தாக்கு பிடிக்க முடியாமல் நடைபாதை அலங்கோலமாக மாறிவிடுகிறது. அதில் பாதசாரிகள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
மேலும் நடைபாதையில் பொருத்தப்படும் இரும்பு கம்பிகளும் சேதமடைந்து காணப்படுகிறது. குடிபோதையில் மர்மநபர்கள் அதை வளைத்து விடுகின்றனர். வேலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபாதைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சரோஜா:-
தெருக்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக கால்வாய் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. சில இடங்களில் ஒப்பந்ததாரர்கள் முறையாக அமைப்பதில்லை. இதனால் சில நாட்களிலேயே கால்வாய் உறுதிதன்மையை இழந்து விடுகிறது.
மேற்பகுதியில் உள்ள பேவர் பிளாக் கற்கள் எளிதில் கையில் பெயர்த்து எடுக்கப்படும் வகையில் அமைக்கப்படுகிறது. பக்கவாட்டு தடுப்புடன் கற்கள் பதிக்க வேண்டும். இரும்பு கம்பிகளும் உறுதியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன்:-
நடைபாதைக்கு மேற்பகுதியில் இரும்பு கம்பிகள் உறுதியாக பொருத்தப்படவில்லை. பல்வேறு இடங்களில் கம்பிகள் ஆடும் நிலையில் காணப்படுகிறது. சில இடங்களில் கம்பிகளையும் நெளித்து வைத்துள்ளனர். இரும்பு கம்பிகள் ஆடாத வகையில் உறுதியாக பொருத்த வேண்டும். நடைபாதையினை அவ்வப்போது மாநகராட்சி உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழை பெய்து வருவதால் நடைபாதையை பயன்படுத்தும் மாணவர்கள், முதியவர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். சேதமான அனைத்து நடைபாதைகளையும் மீண்டும் சீரமைக்க வேண்டும்.