குறைந்த மின்அழுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதி
காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சியில் குறைந்த மின்அழுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சியில் குறைந்த மின்அழுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைந்த மின் அழுத்தம்
இதுகுறித்து காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் கலெக்டர் மகாபாரதிக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- சீர்காழி பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த மின்னழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.இதனால் வீடுகளில் உள்ள பல்புகள், குளிர்சாதன பெட்டிகள், ஏ.சி. மற்றும் குடிநீர் மின் மோட்டார்கள் இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். காவிரி பூம்பட்டினம் ஊராட்சி கடலோர கிராமங்களில் உள்ளடக்கியதாகும். இதில் பூம்புகார், புதுக்குப்பம், நெய்த வாசல், கீழையூர் உள்ளிட்ட குக்கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக காணப்படுகிறது.
குடிநீர் மோட்டார் இயங்குவதில் சிரமம்
இதன் காரணமாக வெளியிடங்களில் இருந்து மோட்டார்கள் மூலம் குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெயில் அதிகரித்து இருப்பதால், பொதுமக்களின் குடிநீர் தேவையும் அதிகரித்து காணப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தடையில்லாத குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக குறைந்த மின்னழுத்த மின்சாரம் வினியோகிக்கப்படுவதால் குடிநீர் மோட்டார்கள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் மோட்டாரை இயக்குவது இல்லை.
சீரான மின்சாரம்
இதனால் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இதை கருத்தில் கொண்டு ஊராட்சியின் மூலம் பொது மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு பற்றாக்குறையாக காணப்படுகிறது.
பொதுமக்களின் நலன் கருதி மின் மோட்டார்களை தொடர்ச்சியாக இயக்கி குடிநீர் வழங்க ஏதுவாக சீரான மின்சாரத்தை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.