சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி


சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகையை அடுத்த நாகூரில் கடந்த 2 நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகையை அடுத்த நாகூரில் கடந்த 2 நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடைகாலம் ஆகும். இந்த 4 மாதங்களில் இயல்பாகவே தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலத்தில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.

ஜூலை மாதம் பிறந்த பின்னர் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இதமான காற்று வீச தொடங்கும். ஆனால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடைகாலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

நாகூர் தர்கா

நாகை மாவட்டம் நாகூரில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. பகலில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால், இரவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. மின்விசிறிக்கு கீழே இருந்தாலும் வெப்பக்காற்று தான் வீசுகிறது. இந்த வெயிலால் சாலைகளில் அனல் காற்று வீசியது.

இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், சாலையில் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். உலக பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவிற்கு வெளியூரிலிருந்து வாகனங்களில் வரும் சுற்றுலாப்பயணிகள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். சுற்றுலாத்தலமான சில்லடி கடற்கரைக்கு சென்றாலும் வெயிலின் கொடுமையை தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி செல்கின்றனர்.

குறைவான மக்கள் நடமாட்டம்

வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள நடந்து சென்றவர்கள் குடைகளை பிடித்து கொண்டும், சிலர் துணிகளால் முகத்தை மூடிக் கொண்டும் சென்றனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் தலையில் துணிகளை போர்த்திக்கொண்டு சென்றனர். பலர் வெயிலின் தாக்கத்திற்கு பயந்துபோய் வீட்டைவிட்டே வெளியே வர தயங்கினார்கள்.

இதனால் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. சாலை முழுவதும் தண்ணீர் ஓடுவதைப்போல் கானல் நீர் தெரிந்தது. மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

குளிர்பான கடைகள்

வெப்ப தாக்குதலில் இருந்து உடலை பாதுகாத்து கொள்ள இளநீர், கரும்புச்சாறு, கூழ், குளிர்பானங்களை மக்கள் தேடி சென்றனர். இதனால் இதுபோன்ற கடைகள் சாலையோரங்களில் அதிக அளவில் காணப்பட்டன. இந்த கடைகளில் விற்பனையும் அதிகளவு நடைபெற்றது. ஆடி மாதத்தில் காற்று அதிகமாக இருக்கும்.

ஆனால் அந்த மாதத்திலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ஆவணி மாதம் பிறந்தால் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்து வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என மழையை எதிர்பார்த்தபடி மக்கள் காத்திருக்கின்றனர்.


Next Story