கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி
கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
ஈரோட்டில் கடுமையான வெயில், வெப்பக்காற்று என்று பொதுமக்களை கோடை வாட்டுகிறது. நேற்று ஈரோட்டில் வெயில் அளவு 104.72 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கிறது. தார் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. 2 சக்கர வாகனங்களில் சென்றவர்களும் வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தண்ணீர் தாகம் காரணமாக ஆங்காங்கே குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இலவச நீர் மோர் பந்தல்களிலும் கூட்டம் அலைமோதியது. 2 சக்கர வாகனங்களில் சென்ற பெண்கள் பலரும் துப்பட்டாவை தலையில் போட்டுக்கொண்டு சென்றனர். பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச்சென்றவர்களும் வெயில் காரணமாக சிரமப்பட்டனர்.
மாலை 6 மணிக்கும் மேல் வெயில் வாட்டுவதால் இரவில் 90 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் வாட்டுகிறது. மின்விசிறிகளும் அனல் காற்றையை வீசுவதால் தூக்கம் வராத நிலையும் உள்ளது. எப்படியாவது கோடை மழை பெய்து வெப்பம் குறைந்தால் மட்டுமே வெயிலின் பிடியில் இருந்து ஈரோடு மக்கள் தப்பிக்க முடியும். ஆனால், மழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
இந்தநிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டால் மக்கள் பாடு திண்டாட்டம்தான். எனவே ஈரோட்டில் மழை பெய்ய வானம் கருணை காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.