அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் வவ்வால் தொல்லை
அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் வவ்வால் தொல்லையால் மக்கள் அவதியடைகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தினமும் புற நோயாளிகள் பலர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார் கள். அதோடு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவ-மாணவிகள் வந்து ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள். இதனால் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாி எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
இந்த நிலையில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாி கடந்த சில வாரங்களாகவே வவ்வால்களின் புகலிடமாக மாறியுள்ளது. ஏன் எனில் ஆஸ்பத்திரி வளாகத்தின் முன் பகுதியில் உள்ள அரச மரத்தில் ஏராளமான பெரிய பெரிய வவ்வால்கள் தலைகீழாக தொங்கிக் கொண்டு இருக்கின்றன. தினமும் வவ்வால்கள் கூச்சலிட்டு கொண்டும், எச்சமிட்டு கொண்டும் இருக்கிறது. இதனால் நோயாளிகள் மற்றும் மாணவ-மாணவிகள் சிரமம் அடைகிறார்கள். அதிலும் நேற்று மதியம் மின்கம்பிகளை உரசும் மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது மரத்தில் குடியிருந்த வவ்வால்கள் அங்குமிங்குமாக பறந்து தொல்லை செய்தன. எனவே ஆயுர்வேத அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வவ்வால்களை விரட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.