சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது என கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
திட்டச்சேரி:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது என கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
மருத்துவ முகாம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நாகை மண்டலம் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பனங்குடியில் உள்ள வட்ட செயல்முறை சேமிப்பு கிடங்கு வளாகத்தில் நடந்தது.
முகாமிற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மேலாளர் தியாகராஜன், துணைமேலாளர்கள் மலர்கொடி, ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் வரவேற்றார். கலெக்டர் அருண்தம்புராஜ் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-
சர்க்கரை நோய்
முகாமில் பரிசோதனை செய்து கொண்டவர்களில் சிலருக்கு சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு இருப்பதை டாக்டர் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
சர்க்கரை நோயை கண்டு யாரும் அச்சம் அடைய வேண்டாம். டாக்டர் பரிந்துரை செய்துள்ள மாத்திரைகளை டாக்டர் அறிவுரைப்படி உரிய நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் நோய் குணமடையும்.
நிறுத்தக்கூடாது
நோய் குணமடைந்தவுடன் திடீரென மருந்து, மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடக்கூடாது. டாக்டர் பரிசோதனை செய்து குறிப்பிடும் நேரத்தில் தான் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் சித்த மருத்துவம், கண்பரிசோதனை, இதய பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதில் இணை இயக்குனர் ஜோஸ்பின்அமுதா, துணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி மேலாளர் செல்வராசு நன்றி கூறினார்.