அறிவியல் மையத்தில் மக்கள் குவிந்தனர்
நெல்லையில் அறிவியல் மையத்தில் மக்கள் குவிந்தனர்
நெல்லையில் அறிவியல் மையத்தில் காணும் பொங்கல் விழாவையொட்டி மக்கள் குவிந்தனர்.
மாட்டு பொங்கல்
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் நேற்று காணும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நேற்று உறவினர் வீடுகளுக்கும், சுற்றுலா ஸ்தலங்களுக்கும் படையெடுத்து சென்றார்கள். மேலும் சினிமா தியேட்டர்களுக்கு சென்று புதிய திரைப்படங்களையும் கண்டு களித்தனர்.
அறிவியல் மையம்
நெல்லையில் பொழுது போக்கு அம்சமாக உள்ள அறிவியல் மையத்தில் நேற்று காலை 11 மணி முதல் மக்கள் கூட்டம் வரத்தொடங்கியது. மதிய நேரம் பொதுமக்கள் வீடுகளில் தயார் செய்த உணவுகளை கொண்டு வந்து அறிவியல் மையத்தில் அமர்ந்து குடும்பத்தாருடன் சாப்பிட்டனர். மேலும் அங்குள்ள அறிவியல் பொருட்களையும் பார்த்து, ஊஞ்சல், சறுக்கு தளத்திலும் விளையாடி மகிழ்ந்தனர்.
இதே போல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு சென்ற பொது மக்கள் ஆற்றில் நீராடினர். இதையொட்டி நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.