விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்


விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 Sept 2023 2:30 AM IST (Updated: 18 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல்லில் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல்லில் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

விநாயகர் சதுர்த்தி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சதுர்த்தி பூஜைகள் நடைபெறுகிறது. அதேபோல் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். அப்போது களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபாடு செய்வார்கள். பின்னர் ஒருசில நாட்கள் கழித்து அந்த சிலைகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச்சென்று கரைத்துவிடுவார்கள். அதன்படி விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு கோவில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் பயபக்தியுடன் நடத்தப்படும்.

பூக்கள் விற்பனை

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் முக்கிய இடம் பிடிப்பவை பூக்கள் தான். இதனால் சதுர்த்தி விழா விற்பனைக்காக திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பூக்கள், திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதேபோல் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை வாங்குவதற்கு மார்க்கெட்டில் குவிந்தனர்.

வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கினர். இதனால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்றது. அதேபோல் முல்லைப்பூ ரூ.900-க்கும், சாதிப்பூ ரூ.850-க்கும் விற்பனை ஆனது. மேலும் பிற பூக்களின் விலையும் நேற்று பல மடங்கு உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பூஜை பொருட்கள்

அடுத்தபடியாக அவல், பொரி, கடலை, பேரிக்காய் மற்றும் கொய்யா, மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், தேங்காய், வெற்றிலை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அதேபோல் சதுர்த்தி விழாவின் போது விநாயக பெருமானுக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. இதனால் பச்சரிசி மாவு, வெல்லம், எள், கொண்டைக்கடலை ஆகியவற்றையும் மக்கள் வாங்கினர்.

இவ்வாறு பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் திண்டுக்கல்லில் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது.


Next Story