திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் மக்கள் அவதி
திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
திருவெண்காடு:-
திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஆரம்ப சுகாதார நிலையம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதன் மூலம் திருவெண்காடு, பெருந்தோட்டம், தென்னம்பட்டினம், மங்கைமடம், கீழ சட்டநாதபுரம், திருவாலி, நாங்கூர் உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
இங்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த நிலையத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச மாத்திரைகள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
மக்கள் அவதி
ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்லும், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகல் நேரத்தில் மட்டுமே டாக்்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இல்லாத காரணத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இரவில் டாக்டர்கள் இல்லாததால் கிராமங்களில் திடீரென ஏற்படும் விபத்துக்களில் சிக்குபவர்கள், விஷப்பூச்சி கடிகளால் பாதிக்கப்படுபவர்கள், இதய நோயால் பாதிக்கப்படுபவர்கள் 25 கிலோ மீட்டர் தொலைவில் மயிலாடுதுறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கும், 15 கிலோமீட்டர் தொலைவில் சீர்காழியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கும் செல்ல வேண்டி உள்ளது.
கிராம மக்கள் எதிர்பார்ப்பு
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக டாக்டர்களை பணியில் அமர்த்த வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.