மரத்தின் நிழலை நிழற்குடையாக பயன்படுத்தும் பொதுமக்கள்


மரத்தின் நிழலை நிழற்குடையாக பயன்படுத்தும் பொதுமக்கள்
x

தஞ்சை புதிய பஸ்நிலையத்தில் மரத்தின் நிழலை நிழற்குடையாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்படுமா? என்ற பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறுமா என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், மே.29-

தஞ்சை புதிய பஸ்நிலையத்தில் மரத்தின் நிழலை நிழற்குடையாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்படுமா? என்ற பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறுமா என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தஞ்சை புதியபஸ்நிலையம்

தஞ்சை புதிய பஸ்நிலையம், 1995-ம் ஆண்டு தஞ்சையில் 8-வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது கட்டப்பட்டது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பழைய பஸ்நிலையம், வல்லம், கந்தர்வக்கோட்டை, சர்க்கரை ஆலை, மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.புதிய பஸ் நிலையத்தை சுற்றிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கல்லூரிகள் உள்ளன.மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் உள்ளன. இதனால் புதிய பஸ்நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்தோடு காணப்படும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள், மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

இருக்கை வசதி

இவ்வாறு முக்கியத்துவம் கொண்ட புதிய பஸ்நிலையத்தில் மாநகர பஸ்கள் நிற்கும் இடத்தில் பொதுமக்கள் வசதிக்காக இருக்கை வசதி மற்றும் நிழற்குடை இல்லை. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பஸ் ஏறுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,தஞ்சை புதிய பஸ்நிலையம் முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிலையம் ஆகும். இதில் டவுன் பஸ்கள் நிற்கும் இடத்தில் இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை இல்லாததால் மழைக்காலங்களில் மழையில் நனைந்து கொண்டும், வெயிலில் நின்று கொண்டும் பஸ் ஏறி பயணித்து வருகிறோம்.

மரத்தின் நிழலை தான்

குறிப்பாக வல்லம், கந்தர்வக்கோட்டை, சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறோம். பஸ்நிலையத்தில் உள்ள ஒரு மரத்தின் நிழலை தான் நிழற்குடையாக பயன்படுத்தி வருகிறோம்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சையில் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதியபஸ்நிலைத்தில் மாநகர பஸ் நிற்கும் இடத்தில் இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம் என்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story