மேலகொட்டாரத்தில் நள்ளிரவில் காத்திருந்து குடிநீர் பிடிக்கும் மக்கள்
தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்த போதிலும் மேலகொட்டாரத்தில் மக்கள் நள்ளிரவில் காத்திருந்து குடிநீர் பிடித்து வருகின்றனர். அவர்கள் பகலில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம்:
தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்த போதிலும் மேலகொட்டாரத்தில் மக்கள் நள்ளிரவில் காத்திருந்து குடிநீர் பிடித்து வருகின்றனர். அவர்கள் பகலில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேல கொட்டாரம்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காரையார், சேர்வலாறு, காணிக்குடியிருப்பு, பாபநாசம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் அடங்கி உள்ளன. இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. அதில் 14-வது வார்டு பகுதியான மேல கொட்டாரம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மில் தொழிலாளர்களாக உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஓடி வரும் தாமிரபரணி ஆறு பாபநாசத்துக்கு அடுத்தபடியாக மேல கொட்டாரத்துக்கு தான் வருகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்த போதிலும் இந்த பகுதி மக்கள் தண்ணீருக்காக பரிதவித்து வருகின்றனர்.
நள்ளிரவில் தண்ணீர் பிடிக்கும் மக்கள்
அதாவது, பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் அதிகாலை, காலை, மாலை நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் வேளையில் இங்கு இரவில் வினியோகிக்கப்படுகிறது. இதனால் மக்கள் நள்ளிரவில் காத்திருந்து தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளதால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ேமலும் இங்குள்ள சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுவதால் அது சுகாதாரமின்றி இருக்கிறது.
இன்னல்கள்
அந்த பகுதியினர் பலமுறை நகராட்சியில் மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் இரவு நேரத்திலேயே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறுவதை பார்ப்போம்.
மேல கொட்டாரத்தை சேர்ந்த மாரியப்பன்:-
நாங்கள் பல ஆண்டுகளாக நள்ளிரவு நேரத்தில் தான் தண்ணீர் பிடித்து வருகிறோம். இரவு 10 மணிக்கு குடிநீர் வரும் என்பார்கள். ஆனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து 12 மணி, 1 மணிக்கு தான் தண்ணீர் பிடிக்க முடிகிறது. மின்சாரம் இல்லாத நேரத்தில் தண்ணீர் பிடிக்க முடிவது இல்லை. தெருவுக்கே சிறிய அளவிலான குழாய்கள் மூலமாக தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் குறைந்த அளவு தண்ணீரே கிடைக்கிறது.
4 நாட்கள்
அதே பகுதியை சேர்ந்த கண்ணன்:-
நள்ளிரவு நேரத்தில் அதுவும் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஒருமுறை தண்ணீர் பிடிக்க தவறினால், அடுத்து தண்ணீர் பிடிக்க 4 நாட்கள் ஆகி விடுகிறது. ஆண்கள் வேலைக்கு சென்று விட்டால், பெண்கள் நள்ளிரவில் தனியாக தண்ணீர் பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பகலில் சுத்திகரிக்கப்படாமல் வழங்கப்படும் தண்ணீரை குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்துகிறோம். அந்த தண்ணீரில் புழு கிடப்பதால் குடிப்பதற்கு பயன்படுத்த முடிவது இல்லை.
பொன்பால்ராஜ்:- பகலில் வழங்கப்படும் சுத்திகரிக்கப்படாத தண்ணீரில் புழுக்கள் வருவதால் அதை சுத்திகரித்து வழங்க வேண்டும். மேலும் இரவு நேரத்தில் குடிநீர் பிடிக்க வெளியே வரும்போது, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் அச்சமாக உள்ளது. எனவே பகலில் தண்ணீர் வழங்க வேண்டும்.
அலட்சியம்
சங்கரி:- தண்ணீர் வரும் என்று நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்து பின்னர் தூங்கி இருப்போம். காலையில் எழுந்து, தண்ணீர் ஏன் விடவில்லை என்று கேட்டால், 2 மணிக்கு தான் தண்ணீர் விட்டோமே என்று அலட்சியமாக கூறுகின்றனர். இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் முழுவதும் வீணாகிறது. இரவில் வேலைக்கு சென்றால் அப்போது தண்ணீர் பிடிக்க முடிவது இல்லை. இதனால் குடிநீருக்காக 4 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி இருக்கிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளை வைத்து இருப்பவர்கள், இரவில் தூக்கமின்றி தண்ணீர் பிடிப்பதால் பகலில் அவர்களை பள்ளி, கல்லூரிக்கு அனுப்ப மிகவும் சிரமப்படுகின்றனர்.
சரஸ்வதி:- இரவில் பனியில் காத்திருந்து தண்ணீர் பிடிப்பதால் நேய் ஏற்படுகிறது. எனவே பகல் நேரங்களில் குடிநீர் வழங்க வேண்டும். அல்லது தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி வழங்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.