ஆபத்தான பாலத்தில் அச்சத்துடன் செல்லும் மக்கள்
சேரம்பாடி அருகே ஆபத்தான பாலத்தில் அச்சத்துடன் மக்கள் சென்று வருகின்றனர்.
பந்தலூர்
சேரம்பாடி அருகே ஆபத்தான பாலத்தில் அச்சத்துடன் மக்கள் சென்று வருகின்றனர்.
வலுவிழந்த பாலம்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடியில் இருந்து எருமாட்டிற்கு செல்லும் சாலையில் கோரஞ்சால் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பயணிகள் நிழற்குடை அருகே குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நடைபாதையின் குறுக்கே ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடக்க கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய பாலம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் பந்தலூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்துவிட்டது. மேலும் பாலம் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
அச்சம்
இதன் காரணமாக அந்த பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த ஆபத்தான பாலத்தில் அச்சத்துடன் ஆற்றை கடந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
புதுப்பிக்க வேண்டும்
இந்த பாலத்தை கோரஞ்சால், சப்பந்தோடு பகுதி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நாளுக்குநாள் பாலம் வலுவிழந்து வருகிறது. இந்த பாலம் இடிந்தால், போக்குவரத்து தடைபடும். மேலும் அந்த சமயத்தில் அதன் மீது மக்கள் நடந்தால், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தை புதுப்பிக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
--------------
கோரஞ்சால் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள ஆற்றுப்பாலத்தை படத்தில் காணலாம்.
---------------