இடைவிடாமல் கொட்டிய மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள்


இடைவிடாமல் கொட்டிய மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டிய மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி போனார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது

விழுப்புரம்

விழுப்புரம்

விடிய, விடிய மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை ஓய்ந்த நிலையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

கடலோர பகுதிகளான மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

விழுப்புரம் நகரில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு, மழை பெய்தது. இடையிடையே கனமழையாகவும் பெய்தது. இதனால் அன்றாடம் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. நகரில் பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

தண்ணீர் வெளியேற்றம்

மழையின் காரணமாக விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. உடனே நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். தொடர் மழையின் காரணமாக பஸ் நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

செஞ்சி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் செஞ்சி வாரச்சந்தையில் குறைந்த அளவிலேயே விவசாயிகள் கடைகள் அமைத்து இருந்ததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கடை வீதியிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

கடல் சீற்றம்

இதேபோல் விக்கிரவாண்டி, மேல்மலையனூர், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழையும் பெய்தது.

மரக்காணம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நேற்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கடற்கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மழை அளவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

மரக்காணம்.............................30

வல்லம்......................................25

வளவனூர்................................24

கோலியனூர்...........................21

அனந்தபுரம்.............................21

அவலூர்பேட்டை................21

சூரப்பட்டு...............................20

வானூர்.....................................20

வளத்தி.......................................20

முண்டியம்பாக்கம்................19

விழுப்புரம்................................18

நேமூர்..........................................18

திண்டிவனம்............................17

கெடார்.......................................14


Next Story