வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் மக்கள்


வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் மக்கள்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் மழைநீர் வடியாததால் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். சம்பா பயிர்களை காப்பாற்ற வழியின்றி விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

மயிலாடுதுறை

சீர்காழி பகுதியில் மழைநீர் வடியாததால் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். சம்பா பயிர்களை காப்பாற்ற வழியின்றி விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

122 ஆண்டுகளில் இல்லாத மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 9-ந் தேதி வங்க கடலில் குறைந்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்ததால், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, மணல்மேடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 11-ந் தேதி இரவு முதல் 12-ந் தேதி அதிகாலை வரை விடிய, விடிய அதீத கனமழை பெய்தது.சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவானது. மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை ெகாட்டி தீர்த்ததால் நகரம் மற்றும் கிராமப்புறங்கள் வெள்ளக்காடாக மாறின. சம்பா நெல் பயிரிடப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி வயல்வெளிகள் கடல்போல் காட்சி அளிக்கின்றன.

குடியிருப்புகளில் தண்ணீர் தேக்கம்

கனமழையால் சீர்காழி நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் நேற்று 2-வது நாளாக தண்ணீர் தேங்கி நின்றது. சீர்காழி இராணியன் நகர், கோவிந்தசாமி நகர், தட்சிணாமூர்த்தி நகர், கற்பக நகர், எஸ்.கே.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வடிய வழியின்றி குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது.திருப்புங்கூர், கன்னியாகுடி, பெருமங்கலம், மருதங்குடி, அகணி, கொண்டல், வள்ளுவக்குடி, கோவில்புத்தூர், சூரக்காடு உள்ளிட்ட கிராமப்புறங்களிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்திருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சீர்காழி அருகே எடமணல் உள்ளிட்ட கிராமங்களில் வயல்களில் மார்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இங்கு பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காப்பாற்ற வழியின்றி விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நேற்று மழைநீர் வடியாத நிலையில் மக்கள் 2-வது நாளாக முகாம்களிலேயே தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் சட்டநாதபுரம் அரசு தொடக்கப் பள்ளி, தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கான பணிகளில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.மழைநீர் வடியாததால் பல கிராமங்களில் நேற்றும் மின் வினியோகம் செய்யப்படவில்லை. வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் விளை நிலங்களில் வெள்ள நீர் தேங்கி நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மழை அளவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 41 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- சீர்காழி-15, செம்பனார்கோவில்-3. மற்ற பகுதிகளில் மழை பெய்யவில்லை.நேற்று காலை மாவட்டத்தில் லேசான தூறல் மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் மழை பெய்யவில்லை.

நெற்பயிர்கள் சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. கடந்த 11-ந்தேதிக்கு முன்பே பெய்த கனமழையில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து இருந்த நிலையில் தற்போது பெய்த மழையையும் சேர்த்து ஒரு லட்சம் ஏக்கர் அளவில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் கூறுகிறார்கள்.

அழுகக்கூடிய நிலை

குறிப்பாக மயிலாடுதுறை மாப்படுகை, அருண்மொழித்தேவன், நீடூர், மணலூர், வில்லியநல்லூர், பாண்டூர், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி சாலைகளில் வழிந்தோடி விளைநிலத்தில் கலந்து வருவதால் நெற்பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி அழுகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு நட்ட வயல்களில் தண்ணீர் செல்கிறது. வாய்க்கால்களை முறையாக தூர்வாராமல் விட்டதால் பல்வேறு பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு தற்போது தண்ணீர் வடிந்து செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. உடனடியாக வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனமழை எச்சரிக்கை

இன்னும் 2 நாட்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மழைநீர் உடனுக்குடன் வடிந்து செல்லும் வகையில் வாய்க்கால்களை முறையாக தூர்வார தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மின்வினியோகம்

கன மழையின் காரணமாக சேதம் அடைந்த மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை நடும் பணியில் நேற்று மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். பூம்புகார், மேலையூர், மணி கிராமம், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் வினியோகம் வழங்கப்பட்டது. இதற்கான பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களை சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார் நேரில் சென்று பாராட்டினார். மேலும் மேற்கண்ட பகுதி பொதுமக்கள் மின்வாரியத்திற்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story