தனி ரேஷன் கடை கேட்டு ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த மக்களுக்கு அரிசி வழங்கிய பா.ம.க.வினர்


தனி ரேஷன் கடை கேட்டு ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த மக்களுக்கு அரிசி வழங்கிய பா.ம.க.வினர்
x

கோடாலி கிராமத்தில் தனி ரேஷன் கடை கேட்டு ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த மக்களுக்கு பா.ம.க.வினர் அரிசி வழங்கினர். இதையடுத்து, அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

அரியலூர்

ரேஷன் கடை

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை பழுதடைந்தது. அதனை இடித்து அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஏற்கனவே இருக்கும் ரேஷன் கடை ஒரு தரப்பினருக்கு உரிய இடத்தில் இருப்பதாகவும் எனவே ஊருக்கு பொதுவான இடத்தில் ரேஷன் கடையை கட்ட வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த ஒரு தரப்பினர் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் சென்று அவர்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தினை நடத்தினர். இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த மக்களுக்கு உரிய விசாரணை நடத்தி தனி ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று பா.ம.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

போலீசார் குவிப்பு

இதனை வலியுறுத்தும் வகையில் ரேஷன் கார்டுகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்த மக்களுக்கு அரிசி பைகளை பா.ம.க.வினர் வழங்கினர். இதற்கு பா.ம.க. துணைத் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் பா.ம.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது சுமார் 270 குடும்பத்தினருக்கு அரிசி வழங்கப்பட்டது.

இதையடுத்து, கோடாலி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story