அடிப்படை வசதிகள் செய்து தராததால்கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்சி.முட்லூரில் பரபரப்பு
சி.முட்லூரிடல் அடிப்படை வசதிகள் செய்து தராததால் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புவனகிரி,
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் நேற்று சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கிராம மக்கள் பங்கேற்காமல், கூட்டத்தை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள், கூட்டம் நடந்த இடத்தின் அருகில் நின்றபடி, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அப்போது கிராம மக்கள் கூறுகையில், கிராம சபை கூட்டத்தை பெரும்பாலான ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து புறக்கணித்து இருக்கிறோம். ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை.
சாலை, குடிநீர் வசதி போன்ற எந்த பணியும் சரிவர நடைபெறவில்லை. 100 நாள் திட்ட வேலைகளில் முறைகேடுகள் நடக்கிறது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து இருக்கிறோம். அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எழுத்தூரில் முறைகேடு புகார்
இதேபோல் ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அப்பகுதி பெண்கள், கிராம வறுமை ஒழிப்பு திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கு காட்டவில்லை என்றும், அதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கிராம வறுமை ஒழிப்பு திட்டத்தில் கணக்கை காட்டாத பணியாளரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள் முறையிட்டனர்.
இதுபற்றி அறிந்த மங்களூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி விரைந்து வந்து கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினார். அதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.