கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்
சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததால் கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர்.
சேத்தியாத்தோப்பு
என்.எல்.சி.யில் நிரந்தர வேலை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற இருந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் பன்னீர்செல்வம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்லா, ஊராட்சி செயலாளர் மாசிலாமணி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு வந்த கிராம மக்கள், கத்தாழை ஊராட்சியில் உள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் விடுவதை என்.எல்.சி. நிர்வாகம் நிறுத்திவிட்டது. மீண்டும் விளைநிலங்களுக்கு தண்ணீர் விட வேண்டும், என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
புறக்கணிப்பு
அதற்கு ஊராட்சி மன்ற தலைவர், கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதை ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள், நாங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துவிட்டோம். இருப்பினும் எந்தவித பயனும் இல்லை. எனவே என்.எல்.சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து விட்டு, அங்கிருந்து சென்றனர்.
இதனால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டும் மதியம் 12.30 மணி வரை அங்கேயே காத்திருந்தனர். கிராம மக்கள் யாரும் வராததால் அவர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.