பூர்வீக வசிப்பிடத்தை தேடி வந்த மக்கள்


பூர்வீக வசிப்பிடத்தை தேடி வந்த மக்கள்
x

பூர்வீக வசிப்பிடத்தை மக்கள் தேடி வந்தனர்.

அரியலூர்

மீன்சுருட்டியை அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள பள்ளியிடை கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இருளரின குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அப்பகுதியை விட்டு இருளரின மக்கள் இடம்பெயர்ந்தனர். இதையடுத்து அவர்கள் கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்நிலை புறம்போக்குகளில் குடிசைகளை அமைத்து வசித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளதால், இருளரின மக்கள் வசித்து வந்த குடிசைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் ஏற்கனவே வாழ்ந்த பூர்வீக இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளியிடை கிராமத்திற்கு வந்து தாங்கள் வாழ்ந்த பகுதியை தேடினர். ஆனால் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த இருளரின மக்கள், தாங்கள் வாழ்ந்த மற்றும் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 4 ஏக்கர் பரப்பளவு இடத்தை மீட்டுத்தர வேண்டும் எனக் கூறி, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தாங்கள் வாழ்ந்த இடங்களில் கொடிகளை நட்டனர். வாழ இடமில்லாமல் நடுத்தெருவில் இருக்கும் எங்களுக்கு வாழ இடம் வழங்க வேண்டும். எங்களுக்கான இடத்தை மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story