கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காததை கண்டித்துமுண்டியம்பாக்கம் மருத்துவமனையை குடும்பத்தினர் முற்றுகைமுதல்-அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை மறிக்க முயன்றதால் பரபரப்பு


கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காததை கண்டித்துமுண்டியம்பாக்கம் மருத்துவமனையை குடும்பத்தினர் முற்றுகைமுதல்-அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை மறிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காததை கண்டித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையை குடும்பத்தினர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து முதல்-அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மரணங்கள் எண்ணிக்கை அடுத்தடுத்து உயர்ந்து வருவதால், அவ்வப்போது அழுகை சத்தமும் அங்கு ஒலித்துக்கொண்டே உள்ளது.

இந்த நிலையில் சிகிச்சையில் உள்ள 30-க்கும் மேற்பட்டவர்களின் குடும்பத்தினர் தீவிர சிகிச்சை பிரிவு நுழைவு வாயில் முன்பு நேற்று மதியம் 12.30 மணிக்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் உரிய உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதில்லை, படுக்கை வசதிகளும் சரியாக இல்லை. அவர்களுக்கு உதவியாக உள்ள குடும்பத்தினருக்கும் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

பேச்சுவார்த்தை

உரிய உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்படாததால் தான், தொடர்ந்து மரணங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் இங்குள்ளவர்களை உயர்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு வருகை தர இருந்த சூழலில், இவர்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடன் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.(பொறுப்பு) பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

மீண்டும் போராட்டம்

இதன் பின்னர் மதியம் 2.15 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு வருகை தந்தார். தொடர்ந்து, மதியம் 2.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினருடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆய்வு கூட்டம் நடத்தி கொண்டு இருந்தார்.

அப்போது, எக்கியார்குப்பம் கிராமத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும், மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் மரணங்கள் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கு நின்று கொண்டிருந்த முதல்-அமைச்சரின் வழிக்காவல் வாகனத்தை மறிக்க திரண்டு சென்றனர்.

பரபரப்பு

உடன் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் அங்கு விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி, சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் முதல்-அமைச்சரை நேரடியாக சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதற்கு ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து, அவர்களில் 5 பேரை மட்டும் முதல்-அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்த போதே அந்த பகுதியில் போராட்டம் நடந்தது அங்கு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story