விழுப்புரம்-நாகை நான்குவழிச்சாலை பணி: உரிய இழப்பீட்டு தொகை கேட்டு வீடு, நிலம் கொடுத்தவர்கள் சாலை மறியல்


விழுப்புரம்-நாகை நான்குவழிச்சாலை பணி:    உரிய இழப்பீட்டு தொகை கேட்டு வீடு, நிலம் கொடுத்தவர்கள் சாலை மறியல்
x

விழுப்புரம்-நாகை நான்குவழிச்சாலை பணிக்கு உரிய இழப்பீட்டு தொகை கேட்டு வீடு, நிலம் கொடுத்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

புவனகிரி,

நான்கு வழிச்சாலை பணி

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 194 கி.மீட்டர் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த சாலை கடலூர் மாவட்டத்தில் ஆலப்பாக்கம், பெரியப்பட்டு, புதுச்சத்திரம், முட்லூர், சிதம்பரம் வழியாக செல்கிறது. இந்த திட்ட பணிக்கு கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதியளித்த நிலையில், இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

இழப்பீட்டு தொகை

இதில் நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையாக இழப்பீட்டு தொகை இதுவரைக்கும் வழங்கவில்லை. ஆனால், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் இழப்பீட்டு தொகை அதிகரித்து கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் இழப்பீட்டு தொகை வழங்குவதில் இதுபோன்று இழுத்தடிப்பு வேலைகள் நடந்து வருவதாக வீடு, நிலம் கொடுத்தவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து, மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை.

சாலை மறியல்

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று காலை பெரியப்பட்டில் கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். பெரியப்பட்டு வர்த்தக சங்க தலைவர் ஜெய்சங்கர் முன்னிலைவகித்தார். அப்போது அவர்கள் தங்களுக்கு முழுமையான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், மேலும் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் வழங்கியது போன்று கூடுதலாக இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும், உலுப்பை திறமைசாலி அறக்கட்டளை இடத்தில் குடியிருந்தவர்களுக்கும் மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிண்டு ரமேஷ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்களின் கோரிக்கைளை கேட்டறிந்த போலீசார், உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள். மறியல் போராட்டம் காரணமாக, கடலூர்-சிதம்பரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story