தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம்


தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம்
x

பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்

மோசடி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வடக்கு தெருவை சேர்ந்த பச்சமுத்துவின் மகள் பவித்ரா. இவர் ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனத்திடம் பணத்தை கட்டி ஏமாந்துவிட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தாா்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவனம் நடத்தி பவித்ரா போன்று பல பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் மனைவி சிவசங்கரியை(வயது 35) நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிவசங்கரியின் கணவர் சந்தோஷ்குமார், குன்னம் தாலுகா, பென்னக்கோணத்தை சேர்ந்த சரத்குமார் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புகார் அளிக்கலாம்

முன்னதாக சிவசங்கரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மேற்படி நிதி நிறுவனத்தில் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நபர்களும் பணம் கட்டி ஏமாந்திருப்பது தெரியவந்தது. எனவே மேற்படி நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் உள்ள குற்றப்பிரிவில் தங்களது புகாரினை துணை சூப்பிரண்டு தங்கவேலிடம் கொடுக்குமாறும், தாங்கள் இழந்த பணத்தினை மீட்டு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.


Next Story