மனித உயிர்களை காப்பாற்றிய நபர்கள் மத்திய அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மனித உயிர்களை காப்பாற்றிய நபர்கள் மத்திய அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத்திய அரசின் உள்துறை சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளை செய்து உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களைக் காப்பாற்றிய நபர்களுக்கு சர்வோதம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
தைரியம் மிகுந்த மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளை தாமதம் இன்றி உடனடியாக செய்து தனது அசாத்திய திறமைகளால் நீரில் மூழ்கியவர்கள், நிலச்சரிவு, விபத்து மற்றும் நெருப்பில் சிக்கி காயம் அடைந்தவர்கள், மின்சார சாதனங்களால் பாதிப்பு ஏற்பட்டவர்கள், விலங்கினால் தாக்கப்படுபவர்கள் மற்றும் சுரங்கத்தில் ஏற்படும் விபத்துகளில் சிக்கியவர்களை உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
இதற்கு 1.10.2020 முதல் தற்போது வரையிலான காலத்திற்குள் ஆற்றிய வீர சேவையை உள்ளடக்கிய கருத்துக்கள், நாளிதழ்களில் வெளிவந்த செய்தி குறிப்புகள் போன்ற சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். 1.10.2020-க்கு முந்தைய வீர தீர சாதனைகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். ஆயுதப்படை பிரிவு, காவல்துறை, தீயணைப்பு துறையினர் ஆகியோர் தங்களுடைய பணி நேரத்தின்போது அல்லாமல் இத்தகைய சேவை புரிந்திருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.