மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிக வியாதிகள்
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிக வியாதிகள் என்று திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிக வியாதிகள் என்று திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் முருகேஷ் வரவேற்றார்.
அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அருணாசலேஸ்வரர் கோவில்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற தலைப்பில் என்னுடைய பயணத்தை தொடங்கினேன். கோடிக்கணக்கான மக்களைச் சந்திக்கும் எனது பயணத்தின் தொடக்கம் திருவண்ணாமலையில் இருந்து தான் தொடங்கினேன்.
முதலில் பயணமாகத் தொடங்கி, பின்பு வெற்றி பயணமாக மாறியது. இப்பொழுது ஆட்சிப்பயணமாக தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு அடித்தளம் இட்ட இடம் தான் இந்த திருவண்ணாமலை என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
அருணாசலேஸ்வரர் கோவிலானது பழம்பெருமையும், அழகும், பிரமாண்டமும் கொண்டது. அதனுடைய தொன்மை, கம்பீரம் காரணமாக அதை தொல்பொருள் துறை 2004-ம் ஆண்டு கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டது.
அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது பிரசாரத்திற்காக கலைஞர் திருவண்ணாமலைக்கு வந்தார். அவரை ஊர் பொதுமக்களும், பக்தர்களும் வந்து சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். தொல்பொருள் துறை கட்டுப்பாட்டுக்குள் போனால், ஆன்மிகப் பணிகள் தொய்வடையும் என்று சொன்னார்கள்.
அப்போது கலைஞர் சொன்னார், அடுத்து அமையும் ஆட்சியின் கவனத்துக்கு இதனைக் கொண்டு செல்வேன் என்று உறுதி தந்தார். அன்றைக்கு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
பின்னர் காங்கிரஸ் அரசுடன் பேசி, அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் எண்ணத்திற்கேற்ப மீட்டுக் கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மறந்து விடக் கூடாது. இன்றைக்கு, மதத்தின் பேரால் அரசியல் நடத்துபவர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது.
இவ்வாறு தி.மு.க. அரசுக்கும் திருவண்ணாமலைக்கும் நீண்ட உறவு இருக்கிறது.
இன்றைய அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பாக மொத்தம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 169 பயனாளிகளுக்கு ரூ.693 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. ரூ.70 கோடியே 27 லட்சம் மதிப்பிலான 91 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ரூ.340 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 246 புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
கிரிவலப்பாதையில் அடிப்படை வசதி
அருணாசலேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்யவும், கிரிவலம் செல்லவும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழாவின் போதும் கிரிவலம் செல்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.
கிரிவலத்திற்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த அரசு நிறைவேற்றித் தரும்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை என்பது திருவண்ணாமலை நகராட்சி, அத்தியந்தல், ஆணாய்ப் பிறந்தான், அடி அண்ணாமலை, வேங்கிக்கால் ஆகிய 4 ஊராட்சிகளை உள்ளடக்கிய 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது.
எனவே கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நிதி பற்றாக்குறை காரணமாக மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், பொது அறிவிப்பு அமைப்பு ஆகியவற்றில் ஏற்படும் பழுதுகளும் உடனுக்குடன் சரிசெய்ய இயலாத நிலை இருக்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு அறநிலையத் துறையும், உள்ளாட்சி அமைப்பையும் இணைத்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தி அந்த குழுவிற்கு, இந்தத் தொடர் செலவினங்களை முறைப்படுத்தி கண்காணிக்க ஆவன செய்யப்படும் என்பதை நான் இங்கே அறிவிக்கிறேன்.
ஆன்மிக வியாதிகள்
இவையெல்லாம் மதத்தை வைத்து அரசியல் செய்கின்ற கண்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகள் அல்ல, அவர்கள் உண்மையான ஆன்மிக வியாதிகள், ஆன்மிகப் போலிகள், ஆன்மிகத்தைத் தங்களது அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய எண்ணத்தைக் கொண்டவர்கள். நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை.
கட்சியானாலும், ஆட்சியானாலும் மக்கள் முன் நின்று நாங்கள் நடத்துறோம். அதுதான் அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்துத் தொழில் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை இன்றைக்கு நாம் நடத்தி வருகிறோம்.
அந்த அடிப்படையில்தான் இந்து சமய அறநிலையத் துறை மூலமாகவும் சிறப்பான பணிகளை இந்த அரசு இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது. கோவிலுக்குத் திருப்பணி செய்வது திராவிட மாடலா? என்று சிலர் கேட்கிறார்கள்,கேள்வி எழுப்பி வருகிறார்கள். அனைத்துத் துறையையும் சமமாக வளர்ப்பதுதான் திராவிடமாடல் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
இன்னும் சொன்னால், திராவிட இயக்கத்தின் தாய் கழகமான நீதிக்கட்சி ஆட்சி காலத்தில்தான், இந்துசமய அறநிலையத் துறை சட்டமே போட்டோம். 1925-ம் ஆண்டு அந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
எதற்கு கோவில்களை முறைப்படுத்துவதற்காக ஒரு சட்டம் வேண்டுமென்று ஆன்மிக எண்ணம் கொண்டவர்கள் கோரிக்கை வைத்தபோது அதனை ஏற்று, சட்டம் போட்ட ஆட்சி தான் நீதிக்கட்சியின் ஆட்சி. எது திராவிட மாடல் என்று பிற்போக்குத்தனங்களுக்கும் பொய்களுக்கும் பெருமை எனும் முலாம் பூசி பேசுபவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
"ஐ டோன்ட் கேர்"
ஆன்மிகத்தின் பெயரால் இன்றைக்கு அவர்கள் அரசியல் நடத்த முயற்சிக்கிறார்கள். ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஆன்மிகத்தின் பெயரால் மனிதர்களை சாதியால், மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்குத்தான் அவர்களுக்கு நாங்கள் எதிரிகள். மனிதர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது.
மனிதர்களைப் பிளவுபடுத்துவதற்கு ஆன்மிகத்தை பயன்படுத்துபவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக அவர்கள் நிச்சயமாக இருக்க முடியாது. அறம் என்றால் என்னவென்றே தெரியாத, அறிவுக்கு ஒவ்வாத மூடக்கருத்துகளை முதுகில் தூக்கிச் சுமந்துக் கொண்டிருக்கும் சிலருக்கு போலியான பிம்பங்களைக் கட்டமைக்க வேண்டுமானால் உளறல்களும் பொய்களும் தான் தேவை.
மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புகள், புதிய தொழில்கள், புதிய முயற்சிகள் என்று தமிழ்நாடும் தமிழினமும் முன்னேற சிந்தித்து செயல்படுவது தான், திராவிட முன்னேற்றக் கழகம் அதுதான் திராவிட அரசியல் மரபு.
அறிவார்ந்த யாரும், எவரும் இந்த அரசுக்கு ஆலோசனைகள் சொல்லலாம். அதனை நாங்கள் செயல்படுத்துவோம். அறிவார்ந்தவர்கள் பேசுவதை மட்டுமே நாம் காதில் கேட்க வேண்டும். நமக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் காத்துக் கிடக்கிறது. இது தேர்தல் காலம் அல்ல. மக்களுக்கு நன்மை செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலம் இது.
பொய்யும், புரட்டும், மலிவான விளம்பரம் தேடும் வீணர்களைப் பற்றி 'ஐ டோன்ட் கேர்'. நான் மட்டுமல்ல, நீங்கள் ஒவ்வொருவரும் 'ஐ டோண்ட் கேர்' என்று சொல்லி நகர வேண்டும். அப்படி பொய்களை அனாதைகளாக விட்டு, உண்மை எனும் வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு நடந்தாலே, நாம் முன்னேறலாம். நம்முடைய இலக்குகளை அடையலாம்.
மக்கள் தான் எஜமானர்கள்
நான் இங்கே இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சொல்ல விரும்புவது காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்பதை யாரும் மறக்க வேண்டாம். கலைஞர் அவர்கள் சொல்வார் கோப்புகள் சிகப்பு நாடாவிலே கட்டப்பட்டு உறங்கிக் கொண்டிருக்கும்போது, ஊழல் எழுந்து உட்கார்ந்து ஊர் சுற்றப் புறப்பட்டு விடுகிறது என்று குறிப்பிடுவார்.
அதை மனதில் கொண்டு மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட கலெக்டர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எந்த கோப்பும், எந்தப் பணியும் தேங்க விடக்கூடாது என்ற எண்ணத்தோடு பணியாற்றுங்கள்.
இதனை அனைத்து மட்டத்திலும் உறுதி செய்வதற்காகத் தான் எத்தனை அலுவல்களுக்கு நடுவிலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் திடீர் ஆய்வுகளை மேற்கொள்கிறேன் என்றால் இது தான் காரணம். ஏனென்றால் மக்கள் தான் நம் எஜமானர்கள்.
இதே திருவண்ணாமலையில் 1957-ம் ஆண்டு நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டாரே, நேற்றைக்கு மாலையில் சொன்னேன். ''எங்களுக்கு இந்த உலகத்தில் 2 எஜமானர்கள்தான் உண்டு. ஒன்று எங்களின் மனச்சாட்சி. மற்றொன்று இந்த நாட்டு மக்கள் என்று சொன்னார்.
என்னுடைய மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் நாங்கள் மக்கள் பணியாற்றி வருகிறேன். என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. உங்கள் நம்பிக்கையைத்தான் நான் எல்லாவற்றையும்விட மேலானதாக நினைக்கிறேன். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது, தனிப்பட்ட என் மீதான நம்பிக்கை மட்டுமல்ல. ஒடுக்கப்பட்டிருந்த இந்தத் தமிழினம் ஒளிபெற உதயசூரியன் என உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற என்றும் உங்களில் ஒருவனாக உழைப்பேன்.
பேரறிஞர் அண்ணா, தமிழின தலைவர் கலைஞர் காட்டிய கொள்கைகளின் வழி நடப்போம். அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாகத் இந்தத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம். திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை அடைவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.