ரேஷன் கடைக்கு பூட்டு போட முயன்ற பொதுமக்கள் மயிலத்தில் பரபரப்பு
ரேஷன் கடைக்கு பூட்டு போட முயன்ற பொதுமக்களால் மயிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலம்,
மயிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 854 குடும்ப அட்டைதாரர்களுக்கு பாளையம் வீதியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.
பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதால் மற்ற பணிகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் சன்னதி வீதி, காளியம்மன் கோவில் வீதி, அண்ணா நகர், காமராஜ் நகர் தீர்த்த குல வீதி, வி.ஐ.பி. நகர், பகுதியில் உள்ள 350 குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதியில் தனியாக ரேஷன் கடை அமைத்து தரக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் நேற்று பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி அறிந்த மயிலம் போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.