கிராமத்தை காலி செய்து வனப்பகுதியில் குடியேறிய மக்கள்
கிருஷ்ணகிரி அருகே தீயசக்திகளால் தொடர் மரணங்கள் ஏற்படுவதாக கூறி கிராமத்தை காலி செய்த மக்கள் வனப்பகுதியில் குடியேறிய வினோத சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒம்பலகட்டு கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு வனப்பகுதியில் குடியேறி ஊரில் புகுந்துள்ள பேயை விரட்ட முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று அதிகாலையில் ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர். அப்போது தாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளையும் உடன் அழைத்து சென்றனர். ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.
சமைத்து சாப்பிட்டனர்
இதனை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள் நாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் மாலை சூரியன் மறைந்த பின் கிராம தெய்வங்களுடன் கரகம் எடுத்து கொண்டு முன்னால் செல்ல, அந்த கரகத்தின் பின்னால் கிராம மக்கள் அணிவகுத்து சென்றனர்.
பின்னர் தங்கள் ஊர் எல்லையை சென்றடைந்ததும் ஆடுகளை பலியிட்டு வழிபட்டதுடன் தங்கள் வீடுகளுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.