பா.ம.க.வுக்கு மக்கள் நிச்சயம் அங்கீகாரம் அளிப்பார்கள்


பா.ம.க.வுக்கு மக்கள் நிச்சயம் அங்கீகாரம் அளிப்பார்கள்
x

எனது தலைமையிலான பா.ம.க.வுக்கு மக்கள் நிச்சயம் அங்கீகாரம் அளிப்பார்கள் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னை,

பா.ம.க. புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் பா.ம.க. அணிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, தேர்தல் பணிக்குழு செயலாளர் ஏ.கே.மூர்த்தி, 'பசுமை தாயகம்' அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பூரண மதுவிலக்கு

பா.ம.க.வின் அடுத்தகட்ட வியூகங்கள், யுக்திகள் குறித்து கட்சியின் அணிகளை, அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடி இருக்கிறேன். இந்த கூட்டத்தின் அடிப்படையில் பா.ம.க.வின் அடுத்த 4 ஆண்டு செயல்பாடுகள் இருக்கும். சமூக பிரச்சினைகளை முன்னிறுத்தி எங்கள் அணுகுமுறை இருக்கும். மதுவிலக்கே எங்கள் லட்சியம். இதனை அனைத்து கட்சிகளும் ஏற்றன. ஏன் தேர்தல் அறிக்கையில் கூட தி.மு.க. குறிப்பிட்டது, ஆனால் நிறைவேற்றவில்லை. காலநிலை மாற்றம் சார்ந்த பிரச்சினைகள், ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கவும் உரிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும்.

தமிழகத்துக்கே மிகப்பெரிய சாபக்கேடு மது விற்பனை. வருமானம் என்று பார்க்காமல், அடுத்த தலைமுறையை காப்பாற்றும் எண்ணத்தில் அரசு பூரண மதுவிலக்கை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் படிப்படியாக கூட கொண்டு வரவேண்டும். பா.ம.க. 2.0 செயல்திட்டத்தில் புதிய அணுகுமுறைகளை கொண்டுவர இருக்கிறோம். இப்போதே சொல்லிவிட்டால் பிற கட்சிகள் இதனை 'காப்பி' அடித்துவிடுவார்கள்.

'பா.ம.க. 2.0' செயல் திட்டம்

கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் பதவிகளை நீக்கி மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரத்தை கூட்டியிருக்கிறோம். மாவட்டங்கள் தாண்டி கிராமங்களுக்கு விரைவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். தொண்டர்கள் வரிசையில்தான் நானும் இருக்கிறேன். எனவே கட்சிக்காக ஓடோடி உழைக்க வேண்டிய கடமை எனக்கும் உண்டு.

தமிழக அரசியலில் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். 2016-ம் ஆண்டில் தனித்து களம் கண்டோம். 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற பிரசாரத்தை மக்கள் ஏற்றார்கள். ஆனால் அது வாக்குகளாக வரவில்லை. ஆனால் இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எதிர்பார்ப்பு வேறுவிதமாக இருக்கிறது. எனது தலைமையிலான பா.ம.க.வுக்கு மக்கள் நிச்சயம் அங்கீகாரம் அளிப்பார்கள். மக்கள் விரும்பும் மாற்றத்தை எங்களால் கொண்டுவர முடியும். அதுதான் 'பா.ம.க. 2.0.' அதைத்தான் இனி பார்க்க போகிறீர்கள்.

கடந்த கால தவறுகளை திருத்தி...

இன்னும் 15 ஆண்டுகளுக்கு கூட்டணி இல்லாமல் யாருமே இங்கு ஆட்சி அமைக்க முடியாது. எங்கள் இலக்கு 2026-ம் ஆண்டில் வெற்றிபெற்று, ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கேற்ப எங்களின் யூகங்கள் இருக்கும். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எங்களின் செயல்பாடுகளை இப்போது பின்னோக்கி சென்று பார்த்து கொண்டிருக்கிறோம். எனவே கடந்த கால தவறுகளை திருத்தி, எதிர்கால அரசியலை அணுகுவோம்.

மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிற வகையில் ஒரு அணி இருக்க வேண்டும். அப்போதைய அரசியல் வேறு. இப்போதைய அரசியல் வேறு. ஆனால் இப்போதைய பண அரசியலை முறியடித்து மாற்றத்தை நிச்சயம் கொண்டு வருவோம். அதேபோல சாதி கட்சி என்று எங்களை முத்திரை குத்த நினைப்போரின் சதிகளை முறியடிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அன்புமணி ராமதாஸ் நேற்று தனித்தனியாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


Next Story