"அமைச்சர் செந்தில்பாலாஜியின் கபட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்"; வேலூர் இப்ராகிம் சொல்கிறார்
கைது செய்யப்பட்டபோது அரங்கேற்றிய அமைச்சர் செந்தில்பாலாஜியின் கபட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று வேலூர் இப்ராகிம் கூறினார்.
பாரதீய ஜனதா கட்சியின் 9-ம் ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் வத்தலக்குண்டுவில் நடந்தது. இதில் அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக பாரதீய ஜனதா கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர். தமிழக அரசு, காவல்துறையை ஏவல் துறையாக மாற்றியுள்ளது. அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சுவோம் என்று நினைத்தால், அது தி.மு.க.வின் அறியாமையே. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. தி.மு.க. தலைவர் என்பதை மறந்து, முதல்-அமைச்சர் என்பதை உணர்ந்து மு.க.ஸ்டாலின் மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது அரங்கேற்றிய கபட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். அடுத்ததாக அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படுவார். அதன்பிறகு ஒவ்வொரு அமைச்சர்களாக கைது செய்யப்படுவார்கள். பாரதீய ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்றார். பேட்டியின்போது பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தனபால், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.