தகுதிக்கு மீறி பேசுகிறார்-அண்ணாமலையை மக்கள் நிராகரிப்பார்கள்- மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி
தகுதிக்கு மீறி பேசி வரும் அண்ணாமலையை மக்கள் நிராகரிப்பார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
திருப்பரங்குன்றம்,
தகுதிக்கு மீறி பேசி வரும் அண்ணாமலையை மக்கள் நிராகரிப்பார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
பேட்டி
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட சிலைமான், புளியங்குளம், விரகனூரில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித் திட்டபணிகள், ஆரம்ப சுகாதார மருத்துவமனை மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியை மாணிக்கம் தாகூர் எம்.பி. நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொடர்ந்து பல இடர்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. வறுமை பட்டியலில் இருப்பவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பிறப்பித்திருக்கிறார்கள். இந்த உத்தரவு ஏற்கத்தக்கது அல்ல. இதனால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும். இதை எதிர்த்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுப்போம், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதுவேன். இந்த திட்டத்தில் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பணி கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
அண்ணாமலை
மத்தியில் 16 கட்சி கூட்டணி மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஒத்த கருத்துக்கு வந்து இருக்கிறார்கள். இது வெற்றி கூட்டணியாக மாறி 300 இடங்களை வெற்றி பெறும் என்பது சந்தேகம் இலலை. திருமங்கலத்துக்கும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கும் இடையே உள்ள தூரம் 8 கிலோமீட்டர். இதில் எந்த அரசியலும் ஈடுபடக்கூடாது. அ.தி.மு.க.வினர் இதில் தேவையில்லாத அரசியலை உருவாக்கக் கூடாது. எய்ம்சை கொண்டு வரவிடாமல் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமாரும், விஜயபாஸ்கர் சேர்ந்து கால தாமதம் ஆக்கினார்கள். அதேபோல அரசு ஓமியோபதி மருத்துவகல்லூரி விஷயத்தில் இருக்ககூடாது.
அண்ணாமலையை பொறுத்த அளவில் பொறுப்பில்லாமல் பேசுவதும், தகுதிக்கு மீறி பேசுவதும் வழக்கமாகி விட்டது. அவர் சி.பி.ஐ இயக்குனரோ, அமலாக்கத்துறை இயக்குனரோ இல்லை, இந்தியாவின் உள்துறை அமைச்சரும் இல்லை. பா.ஜ.க.வின் தலைவர் தான். அவர் மெட்ரோ விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தால் முதல்-அமைச்சர் கைது ஆவார் என்று பேசும் முன்னாள் போலீஸ் அதிகாரியின் குணத்தை மக்கள் நிராகரிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கன்குளம் பழனி குமார், சுப்பிரமணி உடன் இருந்தனர்.