நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
x

சொத்து வரி, மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதற்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

திருச்சி

மலைக்கோட்டை, ஜூலை.27-

சொத்து வரி, மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதற்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

ஆர்ப்பாட்டம்

சொத்து வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்டவைகளை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து நேற்று திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் சேர்மனும், மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளருமான கார்த்திகேயன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் எல்.முத்துக்குமார், காந்திமார்க்கெட் பகுதி செயலாளர் டி.சுரேஷ்குப்தா, கவுன்சிலர் சி.அரவிந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

தி.மு.க. அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆன நிலையில் தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்களை நிறைவேற்றவில்லை. குறிப்பாக மக்களுக்கு நன்மை செய்யாமல் சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தி இந்த அரசு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது. ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஏழை, எளிய சாமானிய மக்களின் ஆட்சியாக இருந்து வந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது.

தக்க பாடம் புகட்டுவார்கள்

ஆனால ்மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின் தட்டுப்பாடு உள்ள மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது. பொதுமக்கள் தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று எண்ணி வாக்களித்த நிலையில் மக்களை ஏமாற்றும் வகையில் தி.மு.க. அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. எனவே வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க. அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதல்-அமைச்சராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிலையில் சாலையில் கூடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அ.தி.மு.க.வை சேர்ந்த 400 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பேட்டி

முன்னதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இலவச வேட்டி, சேலை திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்ததன் நோக்கமே கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தான். ஆனால் தற்போது அதனை நிறுத்த உள்ளதாக தெரிய வருகிறது. இந்த திட்டத்தை நிறுத்தக்கூடாது. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பணம் காணாமல் போய் இருப்பதால்தான் காணாமல் போய் உள்ளது என்று புகார் தெரிவித்துள்ளோம், என்னென்ன பொருட்கள் காணாமல் போய் உள்ளதோ, அதுபற்றி தானே புகார் கொடுக்க முடியும். எடப்பாடி பழனிசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றத்தின் வாயிலாக எதிர்கொள்வோம் என்றார்.

மத்திய அரசு ஆதரவு

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மத்திய அரசு ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ளதே?:-

பதில்:- நீங்கள் தான் சொல்கிறீர்கள். கட்சி வேறு, கொள்கை வேறு. அ.தி.மு.க. தலைமைக்கு தலைவர் உள்ளார்.

கேள்வி:- மின்சாரத்துறை கடன் சுமையால் தவித்து வருகிறதே?:-

பதில்:- அ.தி.மு.க. புதிய மின் திட்டங்களை 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொண்டு வந்துள்ளது. கடன் சுமையால் இருப்பது என குறிப்பிடுவது தவறு. இது மக்களுக்கான சேவை துறை ஆகும். மின்சாரத்துறையும், போக்குவரத்துத்துறையும் மக்களுக்கு சேவை செய்வதற்காக தான். இதில் வருமானம் இல்லை. அதனால் விலை உயர்த்துகிறோம் என்று சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story