மத்திய அரசு ஏமாற்றி வருவதை மக்கள் புரிந்துகொள்வார்கள்
மத்திய அரசு ஏமாற்றி வருவதை மக்கள் புரிந்துகொள்வார்கள்
பேரிடர் காலங்களில் தமிழக அரசுக்கு நிதி கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
ஆய்வு
நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்கள் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சாய்ந்தன. முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று மாலை திருமருகல் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் திருமருகல் அருகே ஆலத்தூர் கிராமத்தில் மழையால் சேதமடைந்த அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை பார்வைட்டார். அப்போது விவசாயிகள் பாதித்த நெற்பயிர்களை அமைச்சரிடம் காண்பித்து பாதிப்பு குறித்து தெரிவித்தனர்.
இழப்பீடு வழங்க நடவடிக்கை
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு குழுவை அனுப்பி ஈரப்பதத்தை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரில் நனைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய விவசாயிகளுக்கு கூடுதல் செலவினங்கள் ஆவதால், இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் புரிந்து கொள்வார்கள்
மேலும் தண்ணீர் வடியும் தன்மையை கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் காலங்களில் தொடர்ந்து தமிழக அரசுக்கு நிதி கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதை மக்கள் புரிந்துகொள்வார்கள். நாகை மாவட்டத்தில் மழையால் நெற்பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கீழ்வேளூர் அருகே உள்ள சாட்டியகுடி, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் பாதிப்புகளை அமைச்சர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநாவாஸ் எம்.எல்.ஏ., வேளாண் இணை இயக்குனர் அகண்டராவ், திருமருகல் வட்டார ஆத்மா குழுத்தலைவர் செங்குட்டுவன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.