படி ஏறிச்சென்று மனு அளிக்க முடியாமல் மாற்றுத்திறனாளிகள் அவதி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் படி ஏறிச்சென்று கோரிக்கை மனுக்கள் அளிக்க முடியாமல் மாற்றுத்திறனாளி, முதியவர்கள் அவதிப்படுவதால் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் படி ஏறிச்சென்று கோரிக்கை மனுக்கள் அளிக்க முடியாமல் மாற்றுத்திறனாளி, முதியவர்கள் அவதிப்படுவதால் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் வந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் அலச்சலை குறைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் பிரித்து நடைபெறும் என்றும், அந்தந்த வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் மனு அளித்து பயன்பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கான மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் அவதி
மேலும் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தால் தங்கள் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் மற்ற பகுதிகளை சேர்ந்த மக்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளிக்கின்றனர்.
சராசரியாக ஒவ்வொரு வார குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது 500-க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கை மனு அளித்துவிட்டு செல்கின்றனர். இந்த கோரிக்கை மனுக்களை அளிக்க நடுத்தர வயதினர் மட்டுமின்றி முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வந்து செல்கின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டம் முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறுகின்றது. கலெக்டர் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மனு அளிக்க வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரை தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு படி ஏறிச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
கொரோனா கால கட்டத்திற்கு முன்பு மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முன்பு பெறப்பட்டது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் மட்டுமின்றி வயது முதிர்ந்த முதியவர்களும் பயன்பெற்றனர். அப்போது மாற்றுத் திறனாளிகளிடம் கலெக்டர் நேரில் சென்று மனுக்களை வாங்கினார். கொரோனா பரவலின் போது குறைதீர்வு கூட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற தொடங்கியது. அதில் இருந்து மாற்றுத் திறனாளிகளும், முதியவர்களும் படி ஏறி வந்து கூட்டரங்கில் மனு அளித்துவிட்டு செல்கின்றனர்.
கடந்த வாரங்களில் நடக்க முடியாத முதியவர்களை அவர்களது உறவினர்கள் தூக்கி செல்வதும், மாற்றுத் திறனாளிகள் படிகளில் தவழ்ந்து செல்வதும் காண்போரை கண் கலங்க வைத்தது. எனவே மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற மாற்று நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.