மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் தொடங்கிட விண்ணப்பிக்கலாம்
கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் தொடங்கிட விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து முன்னேற்றம் அடைய மானியத்துடன் கூடிய வங்கி கடனும், மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடனும், ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும், இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வருவாய் கிராமத்திற்கு ஒரு தனியார் இ-சேவை மையம் அமைக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, கிராம தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய உரிமம் பெற https://tnesevai.tn.gov.inமற்றும் https://tnega.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் வருகிற 28-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
மானியத்துடன் வங்கி கடன்
எனவே இ-சேவை மையம் அமைக்க விருப்பமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு பெறுவதற்கான மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களை (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அறை எண்.112, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கடலூர் என்ற முகவரியில் நேரில் சென்றோ அல்லது 04142 284415 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.