மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா


மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்க மாவட்ட தலைவர் தேவன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயில் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் மாவட்ட கலெக்டர் பழனி, சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை கடந்த 5 ஆண்டுகளாக பாலகிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளி செய்து வந்தார். அவரை பணியில் இருந்து திடீரென நீக்கி விட்டனர். இதுபற்றி நாங்கள் அவரிடம் சென்று கேட்டோம். அதற்கு அவர் கூறும்போது, நான் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊதியம் பெற்று வந்தேன். அவர்கள் ஊதியம் வழங்க தாமதம் செய்ததால் மிகவும் கஷ்டப்பட்டேன். இதனால் நான் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலிடம் சென்று, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஊதியம் பெற விருப்பத்தை தெரிவித்தேன். ஆனால் அவர் அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில் தன்னை பணியை விட்டு நீக்கி விட்டதாக அவர் தெரிவித்தார். இதனால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். மேலும் நாங்கள் தேசிய அடையாள அட்டையை பெற முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். பாலகிருஷ்ணன் எங்களைப்போன்ற ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் எங்களை அலைக்கழிக்காமல் எங்களுக்கு வேண்டிய பணிகளை சிறப்பாக செய்து கொடுத்து வந்தார். எனவே அவரை மீண்டும் பணியில் அமர்த்தி அவர் கேட்பது போல் ஊதியம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடில் நாங்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்றனர். இதை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story