மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம், கூடுதலாக வாசிப்பாளருக்கும் ரூ.6 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உதவித்தொகை

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.1000, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரம், இளநிலை கல்விக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் முதுநிலை கல்விக்கு ரூ.7 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 9-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையோடு கூடுதலாக வாசிப்பாளர் உதவித் தொகை 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரமும், இளநிலைகல்விக்கு ரூ.5 ஆயிரமும், முதுநிலை கல்விக்கு ரூ.6 ஆயிரமும் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் மாற்றுத்திறனாளிகள் நல அவலுவலகத்தில் பெற்று தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரிடம் ஒப்புதல் பெற்று தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், யு.டி.ஐ.டி நகல், மாணவர் மற்றும் பெற்றோர், பாதுகாவலர் பெயரில் உள்ள இணை சேமிப்பு கணக்கு வங்கி புத்தக நகல் மற்றும் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட சான்றுகளுடன் இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்: 0461-2340626-ல் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story