ஒரே நாளில் 1,372 வழக்குகளுக்கு சமரச தீர்வு


ஒரே நாளில் 1,372 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,372 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,372 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதி மன்றம்

தேசிய சட்ட பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், மாநில சட்ட பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 11 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது.

முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி. சத்தியதாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளா் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி இன்பகார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதிதுறை நடுவா் எண் 1 அனிதா கிரிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 11 சத்திய நாராயணன், மற்றும் வக்கீல்கள் வழக்குகளை விசாரித்தனர்.

1,372 வழக்குகளுக்கு தீர்வு

இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 159 குற்றவியல் வழக்குகளும், 392 காசோலை மோசடி வழக்குகளும், 172 வங்கிக்கடன் வழக்குகளும், 120 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 98 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும் மற்றும் 270 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 1267 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 2,478 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1,202 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.2 கோடியே 65 ஆயிரத்து 711 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 2,407 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 170 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 18லட்சத்து 23ஆயிரத்து 528 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

நேற்று ஒரே நாளில் 1372 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.3 கோடியே 18 லட்சத்து 89 ஆயிரத்து 239 வரை வழக்காடிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பணியாளா்கள் செய்திருந்தனர்.


Next Story