ஊட்டியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்:நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும்-அதிகாரிகளுக்கு, கலெக்டர் அம்ாித் அறிவுறுத்தல்


ஊட்டியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்:நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும்-அதிகாரிகளுக்கு, கலெக்டர் அம்ாித் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார்.

குறை தீர்ப்பு கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 83 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உதவித்தொகை

இதேபோல் கூட்டத்தில், வருவாய்த்துறை சார்பில், பந்தலூர் வட்டம் புஞ்சவயல் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் மகன்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிக்காகவும், ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட அருவங்காடு பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவருக்கு சர்வதேச அளவிலான மல்யுத்த போட்டியில் கலந்து கொள்வதற்காகவும், மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், சுற்றுலாத்துறை அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.6,840 மதிப்பில் 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள் உள்பட மொத்தம் ரூ.1.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள புத்தகம் மற்றும் இலக்கிய திருவிழா 2023-ஐ முன்னிட்டு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சார்பில் ரூ.25,000 உள்பட மொத்தம் ரூ.2.75 லட்சம் மதிப்பில் காசோலைகள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா, மணிகண்டன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் அலுவலக வாசலில் மாற்றுத்திறனாளி திடீர் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் முகமது யாகூப். மாற்றுத்திறனாளியான இவர் கோத்தகிரி பஸ் நிலையத்திற்கு அருகில் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பேரூராட்சியின் செயல் அலுவலர் இவரை கடையை காந்தி மைதானம் அருகே உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதனை நம்பி யாகூப் தன்னுடைய கடையை காந்தி மைதானம் அருகில் நடத்தி வந்து உள்ளார்.

இந்த நிலையில் கடையை மாற்றம் செய்வதற்காக அங்கு சென்று பார்த்தபோது தனக்கு ஒதுக்கிய இடத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த யாகூப் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் அருமை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் படுக்கை விரிப்பு மற்றும் கம்பளியுடன் குடியேறும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரிடம் பேசி, சமாதானம் செய்து சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தொடர்பு கொண்டு கடை கிடைப்பதற்கு உண்டான வழி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் யாகூப் அங்கிருந்து கிளம்பி சென்றார்.


Next Story